Wednesday, October 08, 2008

எம்.ஜி.ஆருக்கு கிடைக்காத ஒன்று!

எம்.ஜி.ஆருக்கு கிடைக்காத ஒன்று!அது ரஜினிக்கு கிடைத்து இருக்கிறது.அதுதான் சூப்பர் ஸ்டார் என்பது, அவரை தவிர வேறு யாரும் இங்கு சூப்பர் ஸ்டார் ஆக முடியாது. அதை பற்றி குமுதத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம் ............

படைபரிவாரங்களுடன் ரோம் நகரை நெருங்கிவிட்டார் ஜூலியஸ் சீசர். இடையே நொப்பும் நுரையுமாகக் கொந்தளித்து ஓடும் ரூபிகான் ஆறு. `ஆற்றைக் கடந்து போய் ரோமைக் கைப்பற்றுவதா? இல்லை அப்படியே பின்வாங்கி விடுவதா?' என்ற அறத்துன்பமான நிலை. அப்போது சீசர் எடுத்த முடிவு ரூபிகான் ஆற்றைக் கடப்பதுதான். அதன்பின் நடந்ததெல்லாம் வரலாறு.
சீசரைப் போல சூப்பர் ஸ்டார் ரஜினியும் அவரது வாழ்க்கை வரலாற்றில் ஒரு ரூபிகான் ஆற்றின் பக்கம் வந்து சேர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது, அண்மையில் அவர் தொடர்பாக நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது. `இனியும் தாமதிக்க முடியாது. முடிவெடுத்தே ஆக வேண்டும்' என்ற நிலைக்கு ரஜினி தள்ளப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.
ஒரு காலத்தில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறைதான் ரஜினி படம் முகிழ்க்கும் என்றிருந்த நிலையில், `சந்திரமுகி'யைத் தொடர்ந்து உடனே `சிவாஜி' வெளிவர பூரிப்பில் ஒரு சுற்று பெருத்துப் போனார்கள் ரஜினி ரசிகர்கள். ஆனால் `குசேலன்' வெளிவந்தபோது அந்த மகிழ்ச்சி அடியோடு குளோஸ். காரணம், குசேலனில் இடம்பெற்றிருந்த ரஜினி பேசும் சில வசனங்கள். இந்த வசனங்கள் ரஜினியின் இமேஜை உடைத்தெறிய, `குசேலன்' படமும் ஊற்றிக் கொள்ள, தான் பேசிய வசனங்களுக்காக ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து வருத்தம் தெரிவித்து, அந்தப் பிரச்னைக்கு அப்போதைக்குப் முற்றுப்புள்ளி வைத்தார் சூப்பர் ஸ்டார்.
அந்த சரிவுக்குப் பின், ஷங்கர் இயக்கத்தில், `எந்திரன்' படத்தில் பிஸியானார் ரஜினி. அமெரிக்கா மற்றும் பெரு நாடுகளில் அவர் நடிகை ஐஸ்வர்யாராயுடன் டூயட் பாடிக் கொண்டிருந்த நேரம், `அக்டோபரில் ரஜினி தனது ரசிகர்களைச் சந்திக்கிறார்' என்ற செய்தி தமிழகத்தில் மெதுவாக கட்டவிழ்ந்தது. `அக்டோபரில் ஆலோசனை! 2011-ல் அரியணை!' என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டும் அளவுக்கு அது போனது.இதற்கிடையே நடந்ததுதான் அந்த இன்னொரு முக்கிய நிகழ்வு. அது லயோலா கல்லூரி நடத்திய ஒரு கருத்துக்கணிப்பு. பல்வேறு அரசியல் தகவல்களை அள்ளித் தெளிந்திருந்த அந்தக் கருத்துக் கணிப்பில் ரஜினி தொடர்பான ஒரு கணிப்பு, அவரது ரசிகர்களின் உயிர்களை உலுக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவின் ஈடுஇணையில்லாத சூப்பர் ஸ்டாராக இதுவரை திகழ்ந்து வந்த ரஜினியை, இளைய தளபதி விஜய் தாண்டி விட்டார் என்பதுதான் அந்தக் கணிப்பு. சினிமாத் துறையில் மக்கள் செல்வாக்கில் ரஜினி 16.2 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், விஜய் 16.4 புள்ளிகள் பெற்று, சூப்பர் ஸ்டாரைத் தாண்டிவிட்டதாக அந்தக் கருத்துக் கணிப்பில் காட்டப்பட்டிருந்தது, ரஜினி ரசிகர்களை ஆட்டி அசைத்து விட்டது. ``யானை படுத்தாலும்கூட குதிரை உயரத்துக்கு இருக்குமே? எங்கள் சூப்பர் ஸ்டாராவது சினிமாவில் இரண்டாவது இடத்துக்குப் போவதாவது?'' என கொதித்துப் போனார்கள் ரஜினி ரசிகர்கள். இந்தநிலையில் அக்டோபரில் ரஜினி அவரது ரசிகர்களைச் சந்தித்து அளவளாவ இருப்பதற்கும், இந்த விஜய் தொடர்பான கருத்துக்கணிப்புக்கும் இடையே விடுவிக்க முடியாத அளவுக்கு ஒரு முடிச்சு விழுந்திருக்கிறது.
```சூப்பர் ஸ்டார்' என்பது ஓர் ஆளின் பெயர் அல்ல. ஓர் இடத்துக்கான பெயர். நாளை யார் வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டாராக வரலாம்'' என்று ஒரு மேடையிலேயே பகிரங்கமாகப் பேசியவர்தான் ரஜினி. அவ்வளவு பெரிய பெருந்தன்மைக்குச் சொந்தக்காரராக ரஜினி இருந்தாலும், கண்ணெதிரே அவரது சூப்பர் ஸ்டார் பதவி பறிபோவதை அவரது ரசிகக் கண்மணிகளால் கண்டிப்பாகப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் விஜய் தொடர்பாக நடந்த அந்த `கில்லி' விளையாட்டு மற்றும் ரசிகர்களின் `இனி பொறுப்பதில்லை நெஞ்சே' என்பது மாதிரியான போக்குத்தான் சூப்பர் ஸ்டாரை அவரது ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாக்கி இருக்கிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். அதன் ஒரு கட்டம்தான் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ரசிகர்களுடன் ரஜினி நடத்தப்போகும் அந்தச் சந்திப்பு.
ரஜினி உண்மையாகவே ரசிகர்களைச் சந்திக்கப் போகிறாரா? அந்த சந்திப்புக்குப் பின் அறிவிக்கப்படப் போவது என்ன? என்ற மில்லியன் டாலர் கேள்விகளுடன் கோடம்பாக்கம் ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபம் வட்டாரங்களில் நாம் வலம் வந்தோம். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத்தலைவர் சத்தியநாராயணாவுக்கு நெருக்கமாக இருக்கும் சிலரிடம் இதுபற்றி பேச்சுக் கொடுத்தோம்.
`` `குசேலன்' நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று தியேட்டர் ஓனர்களும் விநியோகஸ்தர்களும் ரஜினிக்கு எதிராக, கடந்த ஆகஸ்டில் போர்க்கொடி தூக்கியபோது, ரஜினி ரசிகர்கள் கொதித்துப் போனார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக சென்னையில் பிரமாண்டமான கூட்டம் ஒன்றை நடத்த அவர்கள் ஆயத்தமானார்கள். அந்தக் கூட்டத்தில் விநியோகஸ்தர்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, ரஜினி உடனடியாக அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவும் அவர்கள் தீர்க்கமாக முடிவெடுத்திருந்தனர்.
அது சத்தியநாராயணாவின் காதுக்கு வர, அவருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அமைதிப்படுத்திய அவர், `விரைவில் சூப்பர் ஸ்டாரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். அப்போது, உங்கள் ஆதங்கத்தை அவரிடம் சொல்லுங்கள்' என்று உறுதியளித்தார். அந்த வாக்குறுதியை நம்பி, அப்போதைக்கு அந்தக் கூட்டம் ரசிகர் மன்றத்தினரால் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவே இல்லை. அது நீரின் மேல் எழுதிய எழுத்தான நிலையில், செப்டம்பர் 4-ம்தேதி, ஷ்ரீராகவேந்திரா கல்யாண மண்டப வாசலில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் குவிந்தனர். இதனால், அந்தப் பகுதியே பரபரப்பானது.
அதிர்ந்து போன சத்தியநாராயணா, மீண்டும் சமரசம் செய்ய முயன்றார். ஆனால், இந்த முறை ரசிகர்கள், சத்திய நாராயணாவின் பேச்சை காதில் வாங்கவில்லை. `இப்போதே ரஜினியிடம் பேசவேண்டும்' என்று கோஷம் போட ஆரம்பித்தனர். வேறு வழியில்லாமல் ரஜினியைத் தொடர்பு கொண்ட சத்தி, `அக்டோபர் முதல் வாரத்தில் ரஜினி உங்களைச் சந்திப்பார்' என்று ரசிகர்களிடம் உறுதி அளித்தபிறகுதான் ஒருவழியாக அங்கிருந்து கலைந்து சென்றனர் ரசிகர்கள்.
அதன் பின்பு கடந்த 27-ம் தேதி `எந்திரன்' படத்தின் முதல் ஷெட்யூல் முடித்துவிட்டு, பெரு நாட்டிலிருந்து சென்னை வந்த சூப்பர் ஸ்டார் எப்படியும் தங்களைச் சந்தித்துவிடுவார் என்று ஆவலுடன் காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதற்குள், கடந்த 4-ம்தேதி, `எந்திரன்' ஷூட்டிங்கிற்காக ரஜினி கோவா பறந்துவிட்டார் என்ற தகவல் வெளியானதும் விரக்தியின் விளிம்புக்கே சென்று விட்டனர் ரசிகர்கள். அதுபற்றி மீண்டும் சத்திய நாராயணாவிடம் பேசினர்.
இனிமேலும் ரசிகர்கள் பொறுக்க மாட்டார்கள் என்ற நிலையில்தான், `அக்டோபர் 12-ம்தேதி ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டப நிர்வாகி பாபா என்பவரின் மகள் திருமணத்துக்காக ரஜினி சென்னை வருகிறார். அப்போது நிச்சயம் உங்களைச் சந்திப்பார்' என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குத் தகவல் சொல்லப்பட்டது. இந்த இறுதி நம்பிக்கையில்தான் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றன அந்த வட்டாரங்கள்.
`இதெல்லாம் சரி. உண்மையில் ரஜினி மனதில் என்னதான் இருக்கிறது?' என்று அந்த விடை தெரியாத கேள்வியை நாம் அவர்களிடம் வைத்தோம்.
``கடந்த 27-ம் தேதி பெரு நாட்டிலிருந்து சென்னை வந்த ரஜினி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் தன்னைச் சந்திப்பதில் காட்டும் ஆர்வத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அத்துடன், `குசேலன்' பட விவகாரம் தொடர்பாக பத்திரிகைகளில் தன்னைப்பற்றி வந்த செய்திகளையும் ஒவ்வொன்றாகப் படித்தார். அப்போதெல்லாம் அருகில் இருந்த தனக்கு நெருக்கமானவர்களிடம் இங்குள்ள அரசியல் நிலைமையைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அத்துடன், `உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் தனது ரசிகர்களுக்கு தான் செய்ய வேண்டியது என்ன?' என்று எங்களிடமும், அவரது குடும்பத்தாரிடமும் கேட்டார். அவரது கேள்வியால் நாங்கள் சற்றுத் தடுமாறிப் போனோம். ஏதாவது சொல்லி அதனால் அவர் அப்செட்டாகிவிடக் கூடாது என்பதால் மௌனம் காத்தோம். ஆனால் சூப்பர் ஸ்டாரின் அந்தக் கேள்விக்கு அவரது குடும்பத்தார் சில யோசனைகளைச் சொன்னார்கள். அதோடு `இப்போதைய சூழ்நிலையில், அரசியல் என்ட்ரி என்பது கூடவே கூடாது' என சிலர் சொன்னதையும் ரஜினி கவனமாகக் கேட்டுக் கொண்டார்.
அந்த ஆலோசனைக்குப் பின் சில நாட்கள் தனிமையில் இருந்த அவர் திடீரென அழைப்பு வந்ததும் கோவாவுக்குச் சென்றுவிட்டார். எங்களுடன் நடத்திய அந்த ஆலோசனையினால், தனது ரசிகர் மன்றங்களை இணைத்து சமூக சேவை இயக்கம் ஒன்றைத் தொடங்கும் முடிவில் அவர் இருக்கலாம். அக்டோபர் 12-ம்தேதி, திருமண விழாவுக்கு வரும் அவர், தேர்ந்தெடுத்த சில மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து இந்த முடிவைச் சொல்லி ஆலோசனை நடத்த வாய்ப்பிருக்கிறது.. பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த `சமூக சேவை இயக்கம்' பற்றி அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
ரஜினியின் இந்த அறிவிப்பு, ரசிகர்களின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கும். அதோடு அடிக்கடி தான் சொல்லும், `வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு' ஏதாவது நல்லது செய்வதாகவும் இருக்கும். கடந்த 12 ஆண்டுகளாக ரசிகர்களுக்கும், தனக்கும் இடையே இடைவெளி விழுந்து விட்டதை உணர்ந்துள்ள ரஜினி, இந்தச் சந்திப்பின் மூலம் புதிதாக ஒரு பாலம் போட விரும்புகிறார்'' என்று நீண்ட விளக்கத்தைச் சொல்லி முடித்தனர் அவர்கள்.
இதற்கிடையே, சூப்பர் ஸ்டாரை நடிகர் விஜய் தாண்டிவிட்டார் என்ற கருத்துக் கணிப்பு ரஜினி ரசிகர்களை உள்ளூர ரணகளப்படுத்தியிருக்கிறது. இதுபற்றி, நம்மிடம் பேசிய `ஒன்லிரஜினி டாட் காம்' என்ற வெப்சைட் நடத்தி வரும் சுந்தர், ``உடுமலையில் `குசேலன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டு சென்னை திரும்பும் வழியில் கோவை விமான நிலையத்துக்கு ரஜினி வருகிறார் என்ற தகவல் கசிந்ததும் சில மணிநேரங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் விமானநிலையம் முன் குவிந்து விட்டார்கள். அப்போது, அவர்களின் நெரிசலில் சிக்கிய ரஜினியை விமான நிலையத்துக்குள் அழைத்துச் செல்ல அவரது உதவியாளர்கள் திணறிவிட்டார்கள்.
கடந்த 1989-ல் தனது நண்பருக்காக குளிர்பான அறிமுக விழாவில் கலந்து கொள்ள ரஜினி திருச்சி சென்ற போது, அவருக்கு கிடைத்த வரவேற்பை யாரும் மறந்துவிட முடியாது. இத்தனைக்கும் அந்த விழாவுக்கு முதல்நாள் இரவுதான் விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார் என்று அறிவித்தார்கள். ராமராஜன்(!) தொடங்கி கமல் வரை ரசிகர் மன்ற மாநாடுகளை நடத்தி விட்டார்கள். ஆனால், இதுவரை ரஜினி தனது ரசிகர்களை சென்னையைத் தவிர்த்து வேறு இடங்களில் சந்தித்ததே இல்லை. அப்படி ரஜினி மட்டும் ரசிகர்களைச் சந்திக்க ஒரு விழா நடத்தினால், அது தமிழகம் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய திருவிழாவாக இருக்கும். இதில் ரஜினி செல்வாக்குக் குறைந்து விட்டது என்று யாரோ சொல்கிறார்கள் என்பதையெல்லாம் எந்த ரசிகரும் நம்பத் தயாராகவே இல்லை'' என்று முடித்துக் கொண்டார் சுந்தர்.
இவர், இப்படி கூறினாலும் விஜய் தொடர்பான கருத்துக் கணிப்பு ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்களில் உள்ளவர்களின் நெஞ்சில் ஒரு முள்ளை ஊன்றிவிட்டது என்கிறார்கள் சிலர். ரசிகர் மன்றங்களை இணைத்து சமூக சேவை இயக்கம் தொடங்கும் முடிவுக்கு ரஜினி வந்துள்ளதற்கு அந்தக் கருத்துக் கணிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அவர்கள்.
இந்தமுறையும் ரஜினி அவரது ரசிகர்களைச் சந்திக்காமல் விட்டுவிட்டால் அவரது வீடு அல்லது கல்யாண மண்டபம் முன்பு மிகப்பெரிய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக ரசிகர்கள் முடிவெடுத்திருக்கிறாார்கள். ``1996-ல் ரஜினிக்கு அரசியலில் மிகப் பெரிய கதவு திறந்திருந்தது. அதை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந் நிலையில், 2011-ல் கிடைக்கும் வாய்ப்பையும் அவர் நழுவவிட்டால் திரும்பவும் அந்தக் கதவு எத்தனை முறை தட்டினாலும் திறக்காது'' என்று ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் நம்மிடம் ஆரூடம் சொன்னார்.``கட்சியும் வேண்டாம்; ஒரு கொடியும் வேண்டாம்'' என்று `ராஜாதி ராஜா' படத்தில் ரஜினி பாடுவார். இந்தநிலையில் இயக்கம் என்ற பெயரில் இப்போதைக்கு ரஜினி கொஞ்சம் இறங்கி வந்தால் கூட ரசிகர்களுக்கு அது ஓர் இனிய அதிர்ச்சியாகவே இருக்கும். `இயக்கம் தொடங்கட்டும். இறங்கிவரட்டும்' என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். என்ன செய்யப் போகிறார், சூப்பர் ஸ்டார்?